இடைத்தேர்தலுக்காக 8 நாட்கள் பிரசாரம் செய்யும் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் நா.புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல நாங்குநேரி தொகுதி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி வாகை சூட வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்கள். இதனால் அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய கட்சி தலைவர்களும் ஆயத்தமாகி வருகிறார்கள்.
அந்தவகையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக 4 நாட்களும், இறுதிக்கட்டமாக 4 நாட்களும் என 8 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
அடுத்த மாதம் (அக்டோபர்) 9 மற்றும் 10-ந் தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதையடுத்து 12 மற்றும் 13-ந் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
இறுதிக்கட்டமாக 15 மற்றும் 16-ந் தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும், 18 மற்றும் 19-ந் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் செய்கிறார். அப்போது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர் வாக்குகள் சேகரிக்கிறார்.