தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ம.தி.மு.க. இல்ல நிர்வாகியின் திருமண விழா நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. படுதோல்வியடைந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. அதனை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு பிறகு தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.
இதனால் பொது தேர்தலுக்கு முன்பாகவே இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வரும். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்கும். 2019-ம் ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருமண மேடையில் வைகோ பேசுகையில்:-
முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ ஆய்வு திட்ட போராட்டங்களுக்காக தேனி மாவட்டத்துக்கு பல முறை வந்துள்ளேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறேன். என்னுடைய போராட்டத்தால்தான் மத்திய அரசால் இங்கு நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை கொண்டு வர முடியவில்லை. இனி எந்த காலத்திலும் நரேந்திர மோடி பிரதமராக வர முடியாது என்றார்.