X

இடி, மின்னல் ஏற்படுவதை முன் கூட்டியே அறிய கருவி கண்டுபிடிப்பு!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் சர்வதேச மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர் கே.ஜே. ரமேஷ் கலந்துகொண்டு பேசியதாவது:-

இடி, மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள், நாட்டில் இயற்கை பேரிடரால் ஏற்படும் உயிரிழப்புகளில் 2-வது இடம் வகிக்கிறது. இடி, மின்னலை முன்கூட்டியே கணிப்பது விரைவில் சாத்தியமாகும். ரேடார் மற்றும் செயற்கைகோள்கள் அனுப்பும் புகைப்படங்களைக் கொண்டு, இடி, மின்னல் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.

அதன்மூலம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி மூலமாகவே, குறுஞ்செய்தி மூலமாகவோ தகவல்கள் தெரிவிக்கப்படும். அதற்கான தொழில்நுட்பத்தை மத்திய அரசு தற்போது உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் செயல்திட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.