ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு அங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோபுரத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 5-ந் தேதி இரவு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது.
உடனடியாக மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று ஆய்வு செய்தோம். இப்பகுதியில் உள்ள 21 கோபுரங்களில் ஸ்திரத்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
என்.ஐ.டி. (தேசிய தொழில்நுட்பக் கழக) வல்லுநர்கள் கோபுரத்தின் ஸ்தரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இன்னும் ஓரிரு நாட்களில் அந்த ஆய்வறிக்கை கிடைக்கப்பெறும். அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும். கிழக்கு கோபுர வாசலை சீர் செய்ய ரூ.1.50 கோடி முதல் 2 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பணிகள் ஓராண்டு காலம் நடைபெறும். இந்த பணிகள் கோவிலின் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியானது மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.