X

இடம் மாற்றத்தால் காவல் நிலையத்தில் இருந்து மாயமான கஞ்சா – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னையில் போலீஸ் நிலையங்களில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி இருக்கிறது. கோயம்பேடு மற்றும் மெரினா போலீஸ் நிலையங்களில் கஞ்சா பொட்டலங்களை எலி தின்றுவிட்டதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்ததை அடுத்து அதில் தொடர்புடைய குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கிண்டி போலீஸ் நிலையத்தில் இருக்கும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகி இருப்பதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். கிண்டி போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்ததாக அஜ்மீர் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கஞ்சா பொட்டலங்கள் போலீஸ் நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இதன்பின்னர் கிண்டி போலீஸ் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு வேறு இடத்தில் செயல்பட தொடங்கியது. அப்போது அஜ்மீரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இதனை கிண்டி போலீசார் கோர்ட்டில் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே 2 வழக்குகளில் கஞ்சா பொட்டலங்களை எலி தின்றதால் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் 3-வதாக கிண்டி போலீஸ் நிலையத்திலும் கஞ்சா பொட்டலங்கள் காணாமல் போயிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: tamil news