சரத்குமார் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. அதன்பின்னர் தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மத்தியில் இடம்பிடித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பலருக்கும் இவரின் இசை கூடுதல் பலமாக அமைந்தது.
திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட யுவன் சங்கர் ராஜா ஹை ஆன் யுவன் (High on U1) என்ற இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி மலேசியாவில் ஜூலை 15 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் மற்றும் டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சிலம்பரசன் மற்றும் டி.ராஜேந்தர் மலேசியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதால் ரசிகர்களிடையே ஹை ஆன் யுவன் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹை ஆன் யுவன் இசை நிகழ்ச்சியை தொழிலதிபர் கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் பெரும் பொருட்செலவில் நடத்துகிறார்கள். ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கவே யுவன் சங்கர் ராஜா, சிலம்பரசன் மற்றும் டி.ராஜேந்தரை ஒன்று சேர்த்து இருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜாவை வைத்து அமெரிக்காவில் உள்ள 6 மாநகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்து இருப்பதாக கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் கூறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.