X

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் மழையால் பாதிப்பு

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

டொமினிக் சிப்லி (120 ரன்), பென் ஸ்டோக்ஸ் (176 ரன்) சதம் அடித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. கிரேக் பிராத்வைட் 6 ரன்னுடனும், அல்ஜாரி ஜோசப் 14 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்றைய ஆட்டம் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் 3-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைந்த ரன்னில் ஆல்-அவுட் ஆக்கி முன்னிலை வகிக்கலாம் என்று நினைத்திருந்த இங்கிலாந்து வீரர்கள் போட்டி ரத்தால் ஏமாற்றம் அடைந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் மூன்று இன்னிங்ஸ் விளையாட வேண்டியிருக்கிறது. மழை பெய்யாமல் ஆட்டம் முழுமையாக நடைபெற்றால் ஒருவேளை இங்கிலாந்துக்கு வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் போட்டி டிராவில் முடிவும்.