17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுடன் அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் நவம்பர் 27 அன்று இஸ்லமாபாத் வந்தடைந்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 1-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 9-ந் தேதி முலதானிலும், கடைசி டெஸ்ட் போட்டி 17-ம் கராச்சியிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் போட்டிக்கான சம்பளத்தொகையை பாகிஸ்தானின் வெள்ள பாதிப்புக்கு தருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்காக முதல்முறையாக பாகிஸ்தானில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது. விளையாடும் மற்றும் ஆதரவு குழு மத்தியில் ஒரு பொறுப்பு உணர்வு உள்ளது மற்றும் இங்கு இருப்பது சிறப்பிக்குரியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானை மிகவும் பாதித்த வெள்ளம் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. இது பாகிஸ்தான் நாடு மற்றும் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது வாழ்க்கையில் விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்துள்ளது. கிரிக்கெட்டை தாண்டி திரும்பக் கொடுப்பது மட்டுமே சரியானது என்று நினைக்கிறேன்.
இந்த டெஸ்ட் தொடரில் இருந்து எனது போட்டிக்கான கட்டணத்தை பாகிஸ்தான் வெள்ள பாதிப்புக்கு வழங்குகிறேன். இந்த நன்கொடை பாகிஸ்தானில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.