இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மவுன்ட் மாங்கானுவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முதலாவது டெஸ்டில் விக்கெட் கீப்பர் வாட்லிங்கின் இரட்டை சதமும், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெரின் அபார பந்து வீச்சும் (மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்) நியூசிலாந்துக்கு இமாலய வெற்றியை தேடித்தந்தன. இந்த டெஸ்டுக்கான நியூசிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட், ஆல்-ரவுண்டர் கிரான்ட்ஹோம் நேற்று விலகினர். இதையடுத்து ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல், லோக்கி பெர்குசன், டாட் ஆஸ்டில் ஆகியோர் அந்த அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தொடரை கைப்பற்றும் உத்வேகத்தில் உள்ள நியூசிலாந்து அணி ஹாமில்டன் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 6 டெஸ்டுகளில் (5-ல் வெற்றி, ஒன்றில் டிரா) தோல்வி கண்டதில்லை. அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து படையினர் ஆயத்தமாக உள்ளனர்.
தோல்வி எதிரொலியாக இங்கிலாந்து கேப்டன் 28 வயதான ஜோ ரூட் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார். சமீப காலமாக அவரது பேட்டிங் மெச்சும்படி இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2, 11 ரன் மட்டுமே எடுத்தார். ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3 முறை டக்-அவுட் ஆனார். இந்த ஆண்டில் அவரது ரன்சராசரி 30-க்கும் குறைவாக (27.40) உள்ளது. கேப்டன் பதவியால் அவரது ஆட்டத்தின் திறன் பாதிப்புக்குள்ளாகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பழைய நிலைக்கு திரும்புவதுடன், நியூசிலாந்துக்கும் பதிலடி கொடுத்தால் தான் அவர் சிக்கலில் இருந்து விடுபட முடியும்.
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று கூறும் போது, ‘இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருப்பது மிகப்பெரிய நெருக்கடியாகும். சக வீரர்கள், அணியின் உதவியாளர்கள், அணி நிர்வாகம் என்று அனைவரும் கேப்டன் ஜோ ரூட்டுக்கு ஆதரவாக இருக்கிறோம்.’ என்றார்.
முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை ரசிகர் ஒருவர் இனவெறியுடன் திட்டியது சர்ச்சையை கிளப்பியது. இதற்காக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழாத வண்ணம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ரசிகர்கள் மீதான கண்காணிப்பை தீவிரமாக்க முடிவு செய்துள்ளது.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.