Tamilசெய்திகள்

இங்கிலாந்து தூதர் கைது! – ஈரனுக்கு கண்டனம் தெரிவித்த இங்கிலாந்து

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது என ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக, ஈரான் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும், மனித தவறுகளினால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஈரானில் உள்ள அமிர் கபிர் பல்கலைக்கழகம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைர் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த பாதுகாப்பு படை போராட்டக்காரர்களுடன் இங்கிலாந்து தூதரையும் கைது செய்தது. சில மணி நேரங்களுக்கு பின் அவர்களை விடுதலை செய்தது.

போராட்டத்தை தூண்டிய குற்றச்சாட்டில் அவரை தடுப்புக் காவலில் கைது செய்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளதற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச விதிகளை மீறிய செயல் என குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான், அமெரிக்கா இடையிலான மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து தூதர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *