Tamilவிளையாட்டு

இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்த 3 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. கொரோனாவால் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் போட்டிகளை முயற்சிகள் மேற்கொண்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து செல்ல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு அனுமதி அளித்தது.

இதனால் நேற்று இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது. ஜூன் 8-ந்தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி, ஜூலை 28-ந்தேதி வரை மூன்று போட்டிகள் நடைபெறும் என இங்கிலாந்து அறிவித்தது. போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்திற்குள் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது. இதில் டேரன் பிராவோ, ஷிம்ரோன் ஹெட்மையர், கீமோ பால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். மூன்று பேரும் உயிர் பாதுகாப்பு சூழலை காரணம் காட்டி இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

‘‘மூன்று பேரும் இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ள அவர்களிடம் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது’’ என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *