X

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ்

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. உலக கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

அந்த வகையில் ஒவ்வொரு அணிகளும், தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை மற்ற அணிகளுடன் விளையாடி வருகின்றன. இந்த போட்டிகள் ஒவ்வொரு அணிக்கும், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்படுகின்றன. இதன் மூலம் அந்தந்த அணிகள் வீரர்களின் பலம், எந்த இடத்தில் ஆட வைக்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்கள் பற்றி அணி நிர்வாகம் இறுதி முடிவை எடுக்கும்.

அந்த வரிசையில், இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதையொட்டி இந்த போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்று இருக்கிறார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார். எனினும், உலக கோப்பை தொடரில் பென் ஸ்டோக்ஸ்-ஐ விளையாட வைக்க வேண்டும் என்ற கருத்து பொதுப்படையாக நிலவி வந்தது. மேலும் அணி நிர்வாகமும், இதே போன்ற கருத்தை கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு உலக கோப்பை தொடர் முடியும் வரை இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்று இருக்கிறார். இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரிலும் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் பிறகு, அவர் தனது இடது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வார் என்றும், இதனால் அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜான்னி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், லியம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டொப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட் மற்றும் க்ரிஸ் வோக்ஸ்.

Tags: tamil sports