பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் பிறந்தவர். இவரது தந்தை ஜெரார்ட் ஸ்டோக்ஸ் ரக்பி பயிற்சியாளர். இங்கிலாந்து ரக்பி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் ஸ்டோக்ஸ் தந்தை குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அப்போது பென் ஸ்டோக்ஸ்க்கு 12 வயது. அப்பா ரக்பி பயிற்சியாளராக இருந்த போதிலும், ஸ்டோக்ஸ் கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் காட்டினார்.
அவரது பெற்றோர் நியூசிலாந்து திரும்பிய போதிலும், பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாட விரும்பி இங்கிலாந்திலேயே தங்கிவிட்டார்.
2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் அயர்லாந்துக்கு எதிராக முதன்முதலாக அறிமுகம் ஆனார். அதன்பின் செப்டம்பர் மாதம் டி20 அணியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அறிமுகம் ஆனார்.
2013-ல் முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில், அதுவும் ஆஷஸ் தொடரில் அறிமுகம் ஆனார்.
இதுவரை 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4631 ரன்களும் (10 சதம், 24 அரைசதம்), 163 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 98 ஒருநாள் போட்டியில் 2817 ரன்களும் (3 சதம், 21 அரைசதம்), 74 விக்கெட்டுகளும், 34 டி20 போட்டியில் 442 ரன்களும், 19 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக உள்ளார். இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றிக்கு (போட்டி டை, சூப்பர் ஓவர் டை, அதன்பின் அதிக பவுண்டரி, சிக்ஸ் அடிப்படையில் இங்கிலாந்து சாம்பியன்) முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தது அவரது ஆட்டத்தில் முக்கியமான ஒன்று. அதேபோல் 2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹெட்டிங்லே-யில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் குவித்து 350 ரன்களுக்கு மேலான இலக்கை எட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.