X

இங்கிலாந்து அணி கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது – முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன்

பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டி முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 434 ரன் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

முதல் டெஸ்டில் வென்று அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோற்று தொடரை இழந்ததால் இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அந்நாட்டு ஊடகங்கள் வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவிடம் தோற்றதில் இங்கிலாந்து அணிக்கு அவமானம் இல்லை என்று அந்நாட்டு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த தொடர் முழுவதும் சில நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே வெற்றி பெற்ற விதத்துக்கு இந்திய அணியை பாராட்டுகிறேன். அதற்கு தகுதியான அணியாகும். விராட்கோலி, முகமது ஷமி, கே.எல்.ராகுல், பும்ரா (ஒரு போட்டியில் ஆட வில்லை) ரிஷப் பண்ட் போன்றவர்கள் இந்த தொடரில் பெரும்பாலும் இல்லை. அந்த வகையில் முக்கிய வீரர்கள் இல்லாத பெரிய பட்டியலை கொண்டு இருந்தாலும் இந்தியா சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியது.

திறமை மட்டுமில்லாமல் மனதளவில் வலிமை இருப்பதால் சொந்த மண்ணில் மற்றொரு தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள். சொந்த மண்ணில் அவர்களுடைய வெற்றி விகிதம் அபாரமாக இருக்கிறது. எனவே இந்திய அணியிடம் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை. இந்த தொடரில் இங்கிலாந்து அணி கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது.

அஸ்வின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். 2-வது இன்னிங்சில் அவர் மிகவும் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் ரோகித்சர்மா அவரிடம் புதிய பந்தை கொடுத்தபோது கண்களில் நெருப்பு தெரிந்தது. தொடக்கத்திலேயே விக்கெட் கைப்பற்றி நெருக்கடி கொடுத்து விட்டார்.

துருவ் ஜூரல்-குல்தீப் யாதவ் ஜோடி முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் திருப்பு முனையாகும். சுப்மன்கில் தனது திறமையான ஆட்டத்தை அமைதியாக வெளிப்படுத்தினார். ஜூரல் இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணியில் நன்றாக செயல்பட்டார்.

இங்கிலாந்து அணி தங்களுக்கு கிடைத்த சில தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.