இங்கிலாந்து அணியில் ஜோரூட் மட்டுமே சதம் அடிக்க கூடிய வீரராக உள்ளார் – சச்சின் டெண்டுல்கர்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். அவர் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 180 ரன் குவித்தார்.
முன்னதாக நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டிலும் சதம் அடித்து இருந்தார். அந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 64 ரன்னும் 2-வது இன்னிங்சில் 109 ரன்னும் எடுத்தார்.
அவர் இதுவரை 386 ரன் (2 டெஸ்ட்) எடுத்து இருக்கிறார். மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஜோரூட்டையே இங்கிலாந்து அணி நம்பி இருப்பது போல் தெரிவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியில் ஜோரூட் மட்டுமே சதம் அடிக்க கூடிய வீரராக உள்ளார் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து கேப்டன் ஜோரூட்டின் முடிவு சிறந்ததல்ல. இந்திய தொடக்க வீரர்கள் திறமையாக விளையாடினார்கள்.
டாஸ் வென்ற ஜோரூட் இந்தியாவை பேட்டிங்கை செய்ய அழைத்தபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
தற்போதுள்ள இங்கிலாந்து அணி சரிவின் வரலாற்றை கொண்டிருக்கிறது. அவர்களின் பேட்ஸ்மேன்களை பார்க்கும்போது, இவர் பெரிய சதம் அடிப்பார் என்று கூறுவதற்கு ஜோரூட்டை தவிர வேறு யாரையும் நான் பார்க்கவில்லை.
கடந்த கால அணிகளில் அலஸ்டர் குக், மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன், இயன் பெல், ஜோனதன் டிராட், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் போன்ற வீரர்கள் இருந்தனர். அவர்கள் சதம் அடிக்கும் திறமையோடு விளையாடினார்கள். ஆனால் இப்போதுள்ள இங்கிலாந்து அணியில் எத்தனை பேர் தொடர்ந்து சதங்களை அடிக்க முடியும் என்று பார்த்தால், ஜோரூட்டை தவிர என்னால் வேறு யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று அதுதான் அவர்களின் பேட்டிங்கின் நிலை. இதுதான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததற்கான காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.