இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனுமான இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகிய மோர்கன், அதன்பின் இங்கிலாந்து அணிக்காக ஆடினார். 2019 உலகக் கோப்பையில் களமிறங்கிய இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம், இங்கிலாந்து அணியின் பல்லாண்டு கால உலகக் கோப்பை கனவை நனவாக்கினார் மோர்கன்.
சர்வதேச கிரிக்கெட்டில் மோர்கன் 126 போட்டிகள் தலைமை தாங்கி 76 போட்டிகளில் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாகத் திகழ்ந்துள்ளார். 248 ஒருநாள் போட்டிகளில் 7701 ரன்களையும் 115 டி20 போட்டிகளில் 2,458 ரன்களையும் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 2 சதம், ஒருநாள் போட்டிகளில் 14 சதம், 47 அரைசதம், டி20-யில் 14 அரைசதம் அடித்துள்ளார். இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.