ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் ஸ்டோய்னிஸ் 43 ரன்னில் அவுட்டானார். மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 59 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 126 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அடில் ரஷீத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி ரன்கள் எடுக்கத் திணறினர்.
முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
தொடக்க ஆட்டக்காரரான பேர்ஸ்டோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 84 ரன்னில் வெளியேறினார்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
சாம் பில்லிங்ஸ் தனி ஒருவராக போராடினார். கிடைத்த பந்துகளை ரன்களாக மாற்றினார். ஆனால் அவருக்கும் யாரும் ஒத்துழைப்பு தரவில்லை.
சிறப்பாக ஆடிய சாம் பில்லிங்ஸ் சதமடித்து அசத்தினார். அவர் 100 பந்துகளில் 2 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 118 ரன்கள் குவித்து ஆட்டத்தின் இறுதி பந்தில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவரில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலியா சார்பில் சாம்பா 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஜேசில்வுட் தேர்வு செய்யப்பட்டார்.