இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் கேப்டவுனில் நேற்று பகல்- இரவாக நடந்தது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்தது. டென்லே 87 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), கிறிஸ்வோக்ஸ் 40 ரன்னும் எடுத்தனர். ஷம்சி 3 விக்கெட்டும், ஹென்ட்ரிக்ஸ், பெகுலுவாயோ, சுமுட்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 259 ரன் இலக்குடன் தென்ஆபிரிக்க அணி பின்னர் களம் இறங்கியது.
கேப்டன் குயின்டன் டி காக் சதத்தால் தென் ஆப்பிரிக்கா 259 ரன் இலக்கை எடுத்து எளிதில் வெற்றிபெற்றது. தென் ஆப்பிரிக்கா 47.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
குயின்டன் டி காக் 113 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 107 ரன் எடுத்தார். அவரது 15-வது சதமாகும். மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் பவுமா சதத்தை தவற விட்டார். அவர் 103 பந்தில் 98 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடங்கும்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஒருநாள் போட்டி வருகிற 7-ந்தேதி டர்பனில் நடக்கிறது.