இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் ‘பாக்சிங் டே’ டெஸ்டாக நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா டி காக்கின் (95) சிறப்பான ஆட்டத்தால் 284 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

அதன்பின் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 181 ரன்னில் சுருண்டது. ஜோ டென்லி அதிகபட்சமாக 50 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிலாண்டர் நான்கு விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும், நார்ஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. வான் டெர் துஸ்சென் 51 ரன்னும், நார்ஜ் 40 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 272 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் 103 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஒட்டுமொத்தமாக 385 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 386 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா.

சுமார் இரண்டரை நாட்கள் மீதமிருந்ததால் நிலைத்து நின்றுவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. ரோரி பேர்ன்ஸ் 77 ரன்களுடனும், ஜோ டென்லி 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.சிறப்பாக விளையாடிய ரோரி பேர்ன்ஸ் களத்தில் நின்றதால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. அதேவேளையில் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்களையும் வீழ்த்திவிடும் என்றும் கருதப்பட்டது.

இந்நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோரி பேர்ன்ஸ் மேலும் 7 ரன்கள் எடுத்து 84 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய டென்லி 31 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின் வந்த கேப்டன் ஜோ ரூட் கவுரவமான ஸ்கோரை எட்ட போராடினார். ஆனால் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 9 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 22 ரன்னிலும், சாம் கர்ரன் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து 268 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரபாடா நான்கு விக்கெட்டும், நார்ஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் 95 ரன்கள் அடித்த குயிண்டான் டி காக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் வரும் 3-ந்தேதி கேப் டவுனில் நடக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news