இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, கில் ஆட்டம் தொடங்கியதில் இருந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். கில் 64 பந்தில் அரைசதம் அடிக்க, ரோகித் சர்மா சதத்தை நோக்கி சென்றார். அரைசதம் அடித்த பின் கில் ரோகித் சர்மாவுக்கு இணையாக சதத்தை நோக்கி வந்தார். 147 பந்தில் 99 ரன்களை தொட்டார் ரோகித் சர்மார். 56-வது ஓவரை பஷீர் வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன் அடிக்காமல் மெய்டன் ஆக்கினார் ரோகித் சர்மா.
ஹார்ட்லி வீசிய அடுத்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து 154 பந்தில் சதம் அடித்தார் ரோகித் சர்மா. இந்த தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். ரோகித் சர்மா சதம் விளாசிய நிலையில், அடுத்த ஓவரில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சுப்மன் கில்லும் சதம் அடித்தார். இவர் 137 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார்.