இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – 3வது நாளில் இந்தியா 3/257 ரன்கள் சேர்ப்பு

இந்தியா, இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 106 ரன்னில் அவுட்டானார். சாம் பில்லிங்ஸ் 36 ரன்னிலும், ஜோ ரூட் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 132 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இந்தியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 4 ரன்னில் அவுட்டானார். ஹனுமா விஹாரி 11 ரன்னிலும், விராட் கோலி 20 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் புஜாரா நிதானமாக ஆடினார். அவருக்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒத்துழைப்பு கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 50 ரன்கள் சேர்த்துள்ளது.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 50 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது வரை இந்தியா 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools