ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா சதம் (137 ரன்) அடித்தார். ஸ்டுவர்ட் பிராட் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து இருந்தது. 6-வது வீரராக களம் இறங்கிய பேர்ஸ்டோவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 103 ரன்னும் (அவுட் இல்லை), பென் ஸ்டோக்ஸ் 66 ரன்னும் எடுத்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 158 ரன்கள் பின்தங்கி , கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது.
இங்கிலாந்து அணி 79.1 ஓவர்களில் 294 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 122 ரன் குறைவாகும். பேர்ஸ்டோவ் 113 ரன்கள் எடுத்தார். ஸ்காட் போலண்டு 4 விக்கெட்டும், கம்மின்ஸ், லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
122 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 52 ரன்னில் 2 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர்களான வார்னர் 3 ரன்னில் மார்க்வுட் பந்திலும், ஹாரிஸ் 27 ரன்னில் ஜேக் லீச் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.
அதைத் தொடர்ந்து லபுசேன் 29 ரன்னிலும், ஸ்டீவ் சுமித் 23 ரன்னிலும் வுட், லீச் பந்தில் ஆட்டம் இழந்தனர். 86 ரன் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட் டுக்கு கவாஜா- கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்து ஆடியது.
கவாஜா அபாரமாக ஆடி சதம் அடித்தார். 131 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார். முதல் இன்னிங்சிலும் கவாஜா செஞ்சுரி அடித்திருந்தார். அவரது 10-வது சதம் ஆகும்.
மறுமுனையில் இருந்த கேமரூன் கிரீன் 74 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்துக்கு 388 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கவாஜா 101 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.