X

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் – இந்தியா வெற்றி

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.

இதில் 4வது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, 290 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் ஒல்லி போப், அதிகபட்சமாக 81 ரன்கள் விளாசினார். இந்த தொடரின் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவ், இந்தியா சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்தார்.

இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். ஓப்பனர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிலைத்து ஆடிய ரோகித் சர்மா, சதம் விளாசினார். அவர் 256 பந்துகள் விளையாடி 127 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சார்பில் செத்தேஷ்வர் புஜாரா, ரிஷப் பண்ட், ஷிராதுல் தாக்கூர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 466 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் 368 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் 4வது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்தது.

ஆனால், நேற்று ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.

இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் கண்டு, அணியின் ஸ்கோரை உயர்த்திய போதும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடவில்லை. டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி ஆகியோர் முறையே 5, 0, 0 ஆகிய ரன்களில் வெளியேறியது இங்கிலாந்துக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

இந்தியாவுக்காக உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி, 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி வரும் 10 ஆம் தேதி மான்சஸ்டரில் தொடங்குகிறது.