இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் என்னால் திரும்ப முடியும் – முகம்மது ஷமி நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக கடந்த நவம்பர் 19-ந் தேதி முடிந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை. முகமது ஷமி தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் உடல் தகுதியை பொறுத்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முழு உடல் தகுதியை எட்டாததால் அவர் அணியில் இருந்து விலகினார்.
இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பும் நோக்குடன் முகமது ஷமி உடல் தகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்.
இது குறித்து முகமது ஷமி கூறுகையில், ‘கணுக்கால் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறேன். எனது உடல் தகுதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கணுக்காலில் லேசான விறைப்பு இருக்கிறது. ஆனாலும் நன்றாகவே உள்ளேன். பயிற்சியையும் தொடங்கி விட்டேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு என்னால் திரும்ப முடியும் என்று நம்புகிறேன். சவாலான போட்டிக்கு முடிந்த அளவுக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றார்.