Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 6 விக்கெட் சாய்த்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் கிராலி 53 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 145 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 விக்கெட்டும், ஜேக் லீச் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.

அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் மாயாஜாலத்தில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

81 ரன்னில் இங்கிலாந்து சுருண்டதால் 48 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, ஷுப்மான் கில் நிதானமாக நின்று விளையாடினால் சரிபட்டுவராது என நினைத்து அதிரடியாக விளையாடி ரன்கள் விளாசினர். இதனால் 7.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

அக்சார் பட்டேல் முதல் இன்னிங்சில் 6, 2-வது இன்னிங்சில் 5 என 11 விக்கெட்டுகள் சாய்த்தார். அஷ்வின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் என 7 விக்கெட் சாய்த்தார்.