X

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி டேவிட் மலானின் சதத்தின் மூலம் 287 ரன்கள் குவித்தது. அவர் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், ஆடம் சம்பா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – ஹெட் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் குவித்தது.

இருவரும் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர். வார்னர் 86 ரன்னிலும் ஹெட் 69 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். மார்னஸ் லாபுசாக்னே 4 ரன்னிலும் அலெக்ஸ் கேரி 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்திருந்தார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது.