Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா, பும்ரா

இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸ்ர்கள் குவித்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்த சாதனை படைத்ததில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் அப்ரிடி (351சிக்ஸர்), இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் (331சிக்ஸர்), 3வது இடத்தில் ஜெயசூர்யா (270 சிக்ஸர்) உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷமி 150 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய வீரர் அஜித் அகர்கர் 97 போட்டிகளில் விளையாடி 150 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சர்வதேச அளவில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

இனிடையே நேற்றைய போட்டியில் 7.2 ஓவர் வீசிய இந்திய வேகபந்து வீச்சாளர் பும்ரா 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.