Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – இந்தியா வெற்றி

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுலின் (129) சதத்தால் 364 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (180 நாட்அவுட்) அபார ஆட்டத்தால் 391 ரன்கள் குவித்தது.

27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர், புஜாரா-ரஹானே ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது.

இதேபோல், போட்டியின் கடைசி நாளான இன்று 9-வது விக்கெட்டுக்கு இணைந்த முகமது ஷமி-பும்ரா ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை மிகவும் சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தது. உணவு இடைவேளைக்கு பிறகு, இந்தியா 298 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தடுமாறியது. எனவே, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பை விட களத்தில் நிலைத்து நின்று டிரா செய்ய வேண்டும் என்பதில், கூடுதல் கவனம் செலுத்தினர். எனினும், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஹமீது 9 ரன்கள், பேர்ஸ்டோ 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ஜோ ரூட் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னர் ஜோஸ் பட்லர் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 25 ரன்களில் அவுட்டானார். இதனால் இங்கிலாந்து அணி 120 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட், பும்ரா 3 விக்கெட், இஷாந்த் 2 விக்கெட், ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்குகிறது.