X

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – 2வது நாள் முடிவில் பாகிஸ்தான் 9/223

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரசிகர்கள் இன்றி நடக்கும் இந்த தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷான் மசூத் மற்றும் அபித் அலி களமிறங்கினர். மழையால் முதல் நாள் தடைபட்டது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டு இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் (7), அபித் (49) ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் நேற்று நடைபெற்றது. அபித் அலி அரை சதம் கடந்து 60 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் ஆடிய பாபர் அசாம் 47 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

விக்கெட் கீப்பர் மொகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. ரிஸ்வான் 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் தலா3 விக்கெட், சாம் கரன், வோக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.