தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 269 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 223 ரன்களும் சேர்த்தன.
46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்று முன் தினம் 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்திருந்தது. சிப்லி 85 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிப்லியுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் 47 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்கள் விளாசி இங்கிலாந்தின் ரன்னை ஜெட் வேகத்தில் உயர்த்தி வைத்துவிட்டு ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிப்லி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 133 ரன்கள் எடுத்திருக்கும்போது இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 438 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
டீன் எல்கர், அறிமுக வீரர் பீட்டர் மாலன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாட முடிவு செய்தனர். இருந்தாலும் அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது டீன் எல்கர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் முதல் இன்னிங்சில் 88 ரன்கள் அடித்திருந்தார்.
அடுத்து மாலன் உடன் ஹம்சா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதற்கிடையே இரணடு பவுண்டரிகளுடன் 144 பந்தில் மாலன் அறிமுக போட்டியில் அரைசதம் அடித்தார். ரன் ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் எக்காரணத்தை கொண்டும் விக்கெட்டுக்களை இழந்து விடக்கூடாது என இருவரும் ஒரு முடிவோடு விளையாடினர்.
இதனால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் விரக்தியடைந்தனர். என்றாலும் நம்பிக்கையை இழக்காமல் பந்து வீசினர். அதற்கு ஆட்டம் முடிவதற்கு சற்று முன் பலன் கிடைத்தது. நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முடிவடைவதற்கு இரண்டு ஓவர்கள் இருந்த நிலையில் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹம்சா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ரன்னை எடுக்க அவர் 58 பந்துகளை எதிர்கொண்டார்.
அடுத்து நைட் வாட்ச்மேனாக மகாராஜ் களம் இறங்கினார். தென்ஆப்பிரிக்கா 56 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மாலன் 193 பந்துகளில் 63 ரன்களுடனும், மகாராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று கடைசி நாள் இங்கிலாந்துக்கு 8 விக்கெட்டுக்கள் தேவை. தென்ஆப்பிரிக்காவுக்கு 312 ரன்கள் தேவை. எந்த அணி நிதானத்தை இழக்கிறதோ அந்த அணி பாதகத்தை சந்திக்கும்.
இரு அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டி ஐந்தாம் நாளை எட்டியுள்ளது.