தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
2-வது டெஸ்ட் கேப் டவுனில் நாளைமறுநாள் (3-ந்தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜாப்ரா ஆர்ச்சர் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடவில்லை. அவரது வலது கை முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக வலி ஏற்பட்டதால் பயிற்சியில் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2-வது போட்டியில் களம் இறங்குவது சந்தேகம் எனத் தெரிகிறது. இருந்தாலும் போட்டி தொடங்குவதற்கு சற்று முன் ஆர்ச்சர் குறித்து முடிவு எடுக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை ஆர்ச்சர் களம் இறங்கவில்லை என்றால் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் களம் இறங்க வாய்ப்புள்ளது.