இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – நியூசிலாந்து 375 ரன்களுக்கு ஆல் அவுட்
நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நேற்று தொடங்கியது.
இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக ஜீட் ரவல் மற்றும் டாம் லாதம் ஆகியோர் களமிறங்கினர். ஜீட் ரவல் 5 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த கேப்டன் கேன் வில்லியம்சனும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த ராஸ் டெய்லர் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். 53 ரன்கள் எடுத்த நிலையில் டெய்லர் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி டாம் லாதம் சதம் அடித்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்திருந்தது. டாம்லாதம் 101 ரன்னும் நிக்கோலஸ் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. டாம்லாதம் 105 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. விக்கெட் கீப்பர் வாட்லிங் 55 ரன்கள், மிட்செல் 73 ரன்களும் குவித்தனர். இதையடுத்து நியூசிலாந்து அணி 129.1 ஓவர்களில் 375 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், டாம் கரன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடியது. 7-வது ஓவரில் அந்த அணியின் தொடக்க வீரர் டாம்சிப்லே 4 ரன்னில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை சவுத்தி கைப்பற்றினார். இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது.