தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது. அந்த அணியின் ரிலே ருசோவ் அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 5 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 96 ரன்களை குவித்தார். ஹென்ரிக்ஸ் 53 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி விரைவில் அவுட்டானார். அவர் 14 பந்தில் 29 ரன் எடுத்தார். மொயீன் அலி 28 ரன்னும், ஜேசன் ராய் 20 ரன்னும் எடுத்து வெளியேறினர். சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், இங்கிலாந்து 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் பெலுகுவாயோ, ஷம்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நிகிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இரு அணிகளும் அணி 1-1 என சமனிலை வகிக்கிறது.