ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து 147 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணியின் ஜோஸ் பட்லர் 39 ரன்களும், ஓலி போப் 35 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். இங்கிலாந்து ஆல்அவுட் ஆனதும் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹாரிஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் வார்னர் உடன் மார்னஸ் லாபஸ்சேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. லாபஸ்சேன் 71 பந்தில் அரைசதம் அடித்தார்.
மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 31 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்து. உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. டேவிட் வார்னர் 102 பந்தில் அரைசதம் அடித்தார்.
தற்போது ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. வார்னர் 74 ரன்களுடனும், லாபஸ்சேன் 68 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.