விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் மும்பையில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. அங்கு முதலில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறதிப்போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கும் இ்ந்திய அணி, அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
இங்கிலாந்து பயணத்தையொட்டி இந்திய அணி வீரர்கள் 18 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி முதலில் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த தனிமைப்படுத்தும் நாட்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் திட்டமிடலின்படி, மும்பையில் உள்ள ஓட்டலில் இந்திய வீரர்கள் இன்று தனிமைப்படுத்துதலை தொடங்குகிறார்கள். அதே சமயம் மும்பையில் வசிக்கும் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே, மூத்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோருக்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் வருகிற 24-ந்தேதி தான் ஓட்டலில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இணைய உள்ளனர். ஆனால் முந்தைய 5 நாட்களும் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்துதலை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும் இங்கிலாந்தில் விளையாட இருப்பதால் அவர்களும் மும்பையிலேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். வீரர்களுடன் குடும்பத்தினரும் உடன் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பாதிப்பில் மீண்டுவிட்ட இந்திய மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் சில தினங்களில் மும்பை வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை ஓட்டலில் 2 வாரங்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்ததும் இந்திய வீரர்கள் அதன் பிறகு தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்படுகிறார்கள். அங்கு சென்றதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்கும் சவுத்தம்டனில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அங்கு தனிமைப்படுத்தலின் போது கட்டுப்பாடுகளுடன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்படும்.
முன்னதாக இங்கிலாந்து கிளப்புவதற்கு முன்பாக இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் ‘நெகட்டிவ்’ முடிவு வர வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.