இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தவான் (98), விராட் கோலி (56), கேஎல் ராகுல் (62 நாட்அவுட்), குருணால் பாண்ட்யா (58 நாட்அவுட்) ஆகியோர் அரைசதம் அடிக்க இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது.
பின்னர் 318 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பேர்ஸ்டோவ் 40 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜேசன் ராய் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஜேசன் ராய்- பேர்ஸ்டோவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 135 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார்.
இரண்டு விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பேர்ஸ்டோவ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 66 பந்தில் 6 பவுண்டரி, 7 சிக்சருடன் அந்த ரன்னை எட்டினார்.
அதன்பின் இங்கிலாந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. மார்கன் 22 ரன்னிலும், பட்லர் 2 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 18 ரன்னிலும், மொயீன் அலி 30 ரன்னிலும், சாம் கர்ரன் 12 ரன்னிலும் வெளியேற இங்கிலாந்து 42.1 ஓவரில் 251 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 8.1 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். புவி 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.