இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி, மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும், 2-வது டெஸ்ட் 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.
இதற்காக ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளது. இதைப்போல இந்திய வீரர்களும் சென்னை வந்தடைந்தனர்.
வீரர்கள் 6 நாட்கள் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். பின்னர் 3 தினங்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார் என்று இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீரரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவருமான பனேசர் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் சிறப்பான முறையில் செயல்பட்டார். அவர் இங்கிலாந்துக்கு எதிராகவும் நம்பிக்கையுடன் பந்து வீசுவார். டெஸ்ட் தொடரில் அவர் இந்திய அணிக்கு முக்கிய பங்கு வகிப்பார். ஜடேஜா காயத்தால் ஆடவில்லை. இதனால் 2-வது சுழற்பந்து வீரர் அஸ்வினுக்கு ஏற்ற வகையில் பந்து வீச வேண்டும். இந்த இடத்தை அக்தர் படேல் சரியாக பயன்படுத்தி கொள்வார்.
இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் 2 டெஸ்டில் வென்று சாதித்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்கொள்ளும்.
சென்னை டெஸ்டில் இங்கிலாந்து அணியால் வெற்றிபெற முடியும். வலுவான இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
34 வயதான அஸ்வின் 74 டெஸ்டில் விளையாடி 377 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியது ஒரு இன்னிங்சில் அவரது சிறந்த பந்துவீச்சாகும். 27 முறை 5 விக்கெட்டும், 7 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் எடுத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் அஸ்வின் 9 டெஸ்டில் 42 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
இங்கிலாந்து அணி 2012-13-ல் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு பனேசர் முக்கிய பங்கு வகித்தார். அவர் 17 விக்கெட் கைப்பற்றினார்.