Tamilசெய்திகள்

இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்? – இன்று இறுதி முடிவுகள் வெளியாகிறது

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்துள்ளனர்.வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக நியமிக்கப்பட்டவுடன், அதிகரித்து வரும் எரிசக்தி கட்டண குறைப்பு மற்றும் விநியோக சீராமைப்பு நடவடிக்கை உடனடியாக எடுக்க உள்ளதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவளித்த சகாக்கள், பிரச்சாரக் குழுவினர் மற்றும் அனைத்து கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ரிஷசுனக் குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் வெள்ளையர் அல்லாத முதல் இங்கிலாந்து பிரதமர் என்ற சிறப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.