Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் என்னைப் போலவே ஆடுகிறார் – சச்சின் பாராட்டு

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலநிதி திரட்ட 10 ஓவர் கண்காட்சி கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும், ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும் மோதுகின்றன. ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக இருக்கிறார்.

இதற்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள தெண்டுல்கரிடம் நீங்கள் விளையாடியபோது உச்ச நிலையில் இருந்த காலகட்டத்தில் ஆடியதை போல் தற்போது விளையாடும் வீரர் யார் என்று நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தெண்டுல்கர் பதில் அளித்து கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஆஷஸ் போட்டி தொடரில் லார்ட்சில் நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியை நான் டெலிவிஷனில் பார்த்தேன். பவுன்சர் பந்து தாக்கியதில் ஸ்டீவன் சுமித் காயம் அடைந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக களம் கண்ட மார்னஸ் லபுஸ்சேன் 2-வது இன்னிங்சில் ஆடியதை பார்த்தேன். எனது மாமனாருடன் அமர்ந்து அந்த போட்டியை கண்டு களித்தேன்.

ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2-வது பந்து லபுஸ்சேனை தாக்கியது. ஆனால் அதன் பிறகு அடுத்த 15 நிமிடங்கள் அவர் ஆடிய விதத்தை பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது. அப்போதே, ‘அந்த வீரரிடம் வித்தியாசமான திறமை இருக்கிறது, சிறந்த வீரராக உருவெடுப்பார்’ என்று கூறினேன். அவரது கால் நகர்த்தல் துல்லியமாக உள்ளது. கால் நகர்வு என்பது வெறும் உடல் ரீதியானது மட்டுமல்ல. அது மனரீதியானது. நீங்கள் மனதளவில் நேர்மறையான எண்ணத்துடன் இல்லையென்றால் கால் நகர்த்தல் சரியாக வராது. மனதளவில் வலுவாக இல்லை என்றால் கால் நினைத்தபடி நகராது. அவரது கால் நகர்த்தல் நம்ப முடியாத வகையில் உள்ளது. அவரது பேட்டிங் எனது ஆட்டத்தை நினைவூட்டுகிறது.

இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘விராட்கோலி, ஸ்டீவன் சுமித்தை ஒப்பிடுகையில் யாருடைய ஆட்டம் சிறந்தது என்று கேட்கிறீர்கள்?. ஒப்பிட்டு பார்ப்பதை நான் விரும்பமாட்டேன். என்னை பல வீரர்களுடன் ஒப்பிட்டு பார்க்க முயற்சித்தார்கள். என்னை ஒப்பிடுவதை விட்டுவிடுங்கள் என்று தெரிவித்து விட்டேன். நாம் ஒப்பீடுகளுக்குள் செல்ல வேண்டாம். அவர்கள் இருவரின் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் பார்ப்போம். அவர்கள் இருவரும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள். அவர்கள் ஆடுவதை பார்ப்பது நமக்கு மகிழ்ச்சியே’ என்றார்.

25 வயதான லபுஸ்சேன் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் (1,104 ரன்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *