ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் கவனத்தை திசை திருப்பிய ரிஷப் பந்த்!
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் 11 கேட்ச்கள் பிடித்து உலக சாதனைப் படைத்துள்ளார். இவர் விக்கெட் கீப்பராக செயல்படும்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை சீண்டினார்.
முதல் இன்னிங்சில் “இங்கே யாரும் புஜாரா ஆகிவிட முடியாது” கவாஜாவை பார்த்து கூறினார். இன்று 2-வது இன்னிங்சில் பேட் கம்மின்ஸ் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது ஒரு ஓவர் முழுவதும் கம்மின்ஸை கிண்டல் செய்து கொண்டே இருந்தார்.
பேட் கம்மின்ஸ் பேட் செய்யும்போது ரிஷப் பந்த் “கம் ஆன் பேட் (Come on Pat), உங்களால் மோசமான பந்தை தூக்கி அடிக்க முடியாது, இங்கே விளையாடுவது மிகக்கடினம்” எனக்கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.
சாதனை மற்றும் இன்றைய ஆட்டம் குறித்து குறித்து கூறுகையில் “அவர்கள் இலக்கை நெருங்கி வரும்போது உண்மையிலேயே பதற்றமாக இருந்தது. ஆனால், நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். முதல்முறையாக தொடக்க போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனைப் படைத்திருப்பதில், எனது பங்கும் உள்ளது என்பதில் மகிழ்ச்சி.
பேட்ஸ்மேன்களை சீண்டும்போது அவர்கள் என் மீது கவனம் செலுத்தி, பந்து வீச்சாளர்களை கவனிக்காமல் போவதை நான் விரும்புவேன்” என்றார்.