ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இன்று இந்தியா வருகிறார்

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் (60), இந்தியாவில் 4 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் இன்று இந்தியா வருகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அகமதாபாத்தில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்க உள்ள 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் இணைந்து பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் பார்க்கிறார்.

மேலும், இந்தப் பயணத்தில் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் மும்பை, டெல்லி நகரங்களுக்கும் செல்கிறார். இது ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு, பொருளாதார உறவுகளை மட்டுமின்றி இரு தரப்பு மக்களின் உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும்.

டெல்லியில் நடைபெறுகிற ஆஸ்திரேலிய, இந்திய வருடாந்திர தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் இந்தியப் பிரதமர் மோடியுடன் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் கலந்து கொள்கிறார். வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம், ராணுவம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது பற்றி இருவரும் விவாதிக்க உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools