Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இங்கிலாந்து!

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை (வியாழக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

மின்னொளியின் கீழ் நடைபெறும் பகல்-இரவு டெஸ்டில் பிரத்யேகமாக இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பால்) பயன்படுத்தப்படுகிறது. பிங்க் பந்து பெரும்பாலும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கும் என்பதால் இந்த டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டலாம்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2015-ம் ஆண்டில் இருந்து இதுவரை 16 டெஸ்ட் போட்டிகள் பகல்-இரவாக நடத்தப்பட்டு உள்ளன. இவற்றில் 8 பகல்-இரவு டெஸ்டில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா 8 போட்டியிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக விளங்குகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடந்த பிங்க் பந்து டெஸ்டில் ஆஸ்திரேலியா வெறும் 36 ரன்னில் இந்தியாவை சுருட்டியது நினைவுகூரத்தக்கது. ஆனால் இந்த வகை டெஸ்டில் 32 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயத்தால் விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும்.

பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கு இங்கிலாந்து அணியினர் முட்டுக்கட்டை போடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இங்கிலாந்து அணி இதுவரை நான்கு பகல்-இரவு டெஸ்டில் விளையாடி அவற்றில் ஒன்றில் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

தொடக்க டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் களம் திரும்புவது இங்கிலாந்துக்கு நம்பிக்கை அளிக்கிறது. இதே போல் கால்முட்டி வலியால் அவதிப்பட்ட ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று முழு உத்வேகத்துடன் வலை பயிற்சியில் ஈடுபட்டார். அவர் வீசிய ஒரு பந்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் ஹெல்மெட்டை தாக்கியது.

அதே சமயம் பிரிஸ்பேன் போட்டியில் 13 ஓவர்களில் 102 ரன்களை வாரி வழங்கிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச்சை மாற்றுவது குறித்து அணி நிர்வாகம் யோசிக்கிறது. ஆனால் அடுத்து வரும் போட்டிகளில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3, 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.