ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று முன் தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-3, 6-4, 6-1 என்ற நேர்செட்டில் செர்பியாவின் லாஸ்லோ ஜெரேவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-2, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 63-ம் நிலை வீரரான கனடாவின் வாசெக் போஸ்பிசிலை விரட்டியடித்து தொடர்ச்சியாக 15-வது வெற்றியை பதிவு செய்தார்.
ஒற்றையர் பிரிவில் களம் கண்ட ஒரே இந்தியரான தரவரிசையில் 144-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் 2-6, 5-7, 3-6 என்ற நேர்செட்டில் 73-ம் நிலை வீரரான லிதுவேனியாவின் ரிக்கார்டஸ் பெரன்கிஸ்சிடம் தோற்று வெளியேறினார்.
மற்ற ஆட்டங்களில் பெரேட்டினி (இத்தாலி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), பாபியோ போக்னினி (இத்தாலி), கச்சனோவ் (ரஷியா), போர்னா கோரிச் (குரோஷியா) உள்ளிட்டோர் வெற்றி கண்டனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான சோபியா கெனின் (அமெரிக்கா) 7-5, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் மேடிசன் இங்லிசை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதே போல் ‘நம்பர் ஒன் புயல்’ ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-0, 6-0 என்ற நேர்செட்டில் 82-ம் நிலை வீராங்கனை டாங்கா கோவினிக்கை (மான்ட்னெக்ரோ) ஊதித் தள்ளினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 44 நிமிடமே தேவைப்பட்டது. அதே சமயம் 2 முறை சாம்பியனான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 5-7, 4-6 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த போட்டியின் போது சுவாச பிரச்சினை காரணமாக அஸரென்கா மைதானத்தில் சிகிச்சை பெற்று விளையாடினார். இதே போல் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா காயத்தால் பாதியில் விலகினார்.
மற்ற ஆட்டங்களில் ஸ்விடோலினா (உக்ரைன்), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கோகோ காப் (அமெரிக்கா), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா), பெலின்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கோன்டாவிட் (எஸ்தோனியா), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), ஜெனிபர் பிராடி (அமெரிக்கா), கரோலினா முச்சோவா (செக்குடியரசு) ஆகியோர் தங்களது முதல்தடையை வெற்றிகரமாக கடந்தனர்.