Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான 39 வயது செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-1 என்ற நேர்செட்டில் 51-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் லாரா சிஜ்முன்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் இது அவரது 100-வது ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-1, 6-2 என்ற நேர்செட்டில் 39-வது இடத்தில் உள்ள ரஷியாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவை விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் லிஜிட்டி காப்ரிராவை வெளியேற்றினார்.

மற்ற ஆட்டங்களில் பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கிவிடோவா (செக்குடியரசு), மார்கெட் வான்ட்ரோசோவா (செக்குடியரசு), சபலென்கா (பெலாரஸ்), அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி கண்டனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-1, 6-2 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான டொமினிக் திம் (ஆஸ்திரியா) 7-6 (7-2), 6-2, 6-3 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 40 நிமிடம் நீடித்தது.

மற்ற ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), மிலோஸ் ராவ்னிக் (கனடா), காரெனோ பஸ்டா (ஸ்பெயின்), டிமிட்ரோவ் (பல்கேரியா), டிகோ ஸ்வார்ட்ஸ்மான் (அர்ஜென்டினா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.