கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஓபன் செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஓபன் நடைபெறுமா? என்ற கேள்வியுடன் உள்ளது. மேலும் ஏடிபி டென்னிஸ் தொடர்கள் கேள்விக்குறியாக உள்ளன.
இந்நிலையில் 2020-ம் ஆண்டு டென்னிஸ்க்கு மிகப்பெரிய இழப்பு. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டென்னிஸ் போட்டி மீண்டும் தொடங்கும் என நம்புவதாக ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரபேல் நடால் கூறுகையில் ‘‘டென்னிஸ் போட்டிகள் முடிந்த அளவிற்கு விரைவாக தொடங்கும் என நம்புகிறேன். ஆனால், ஒவ்வொரு வாரமும் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்வது, ஓட்டலில் தங்குவது, விமான நிலையம், மற்ற பகுதிகளுக்கு செல்வது குறித்து யோசிக்கிறேன்.
2021 ஜனவரிக்குள் சகஜ நிலைக்கு திரும்பி போட்டிகளை வழக்கம்போல் நடத்தலாம் என்று உத்தரவாதம் கொடுத்தால் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட தயாராக இருக்கிறேன். இந்த வருடம் நடைபெற இருக்கும் டென்னிஸ் தொடர்களை காட்டிலும் ஆஸ்திரேலிய ஓபனை அதிக அளவில் எதிர்பார்க்கிறேன். 2020 வருடத்தை இழந்து விட்டதாக பார்க்கிறேன்’’ என்றார்.