Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியா விசா ரத்து – போராட்டத்தில் ஈடுபட்ட ஜோகோவிச் ஆதரவாளர்கள்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரருமான 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வந்தார்.  இதனால் ஆஸ்திரேலிய ஓபனில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் போட்டியில் இருந்து விலகக்கூடும் என்றும் தகவல் வெளியாகின.

இதற்கிடையே நோவக் ஜோகோவிச் தனக்கு தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு கிடைத்திருப்பதாக கூறி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்தை அடைந்தபோது, அவரது விசா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விமான நிலையத்தில்  தடுத்து வைக்கப்பட்டார். இதனால் அவர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நோவக் ஜோகோவிச்சுக்கு ஆதரவாக செர்பிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் பெல்கிரேடில் உள்ள அந்நாட்டு பாராளுமன்றத்துக்கு முன்பாக திரண்ட மக்கள், ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய அரசு அடைத்து வைத்து இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.