இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவால் 126 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா, பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
2-வது போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நாளை நடக்கிறது. பொதுவாக சின்னசாமி மைதானம் சிறியது. மேலும் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் கடந்த சில ஐபிஎல் சீசனில் அதிக அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை. ஆடுகளத்தின் தன்மை மாறியுள்ளது.
இதனால் நாளைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் வாணவேடிக்கை நிகழ்த்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் நாளைய போட்டியில் அசத்துவார்கள். குறைந்தது 180 ரன்களுக்கு மேல் குவிக்கலாம் என்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் ஆடுகளம் அதிக ரன்கள் குவிக்க ஒத்துழைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய போட்டியில் அதிக ரன்கள் குவிக்கலாம். நாங்கள் இந்த ஆடுகளத்தை பயன்படுத்தி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. கடைசியாக விஜய் ஹசாரே டிராபி தொடரின்போது பயன்படுத்தப்பட்டது. இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் போதுமான ஸ்கோராக இருக்கும்’’ என்றார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் குருணால் பாண்டியா கூறுகையில் ‘‘நான் இதுவரை ஆடுகளத்தை பார்க்கவில்லை. ஆனால், விசாகப்பட்டினத்தை விட பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும்’’ என்றார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக இந்த ஆடுகளம் வேடிக்கை நிகழ்த்தும் விதமாக இருந்தது. நான் கடந்த ஏழெட்டு வருடத்திற்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாட வந்தபோது, 220 ரன்கள் அடிக்கப்பட்டது. அதன்பின் ஆண்டுகள் செல்ல செல்ல ஆடுகளம் ‘ஸ்லோ’ ஆனது.
விசாகப்பட்டினம் குறைந்த ஸ்கோர் போட்டி. ஆனால் சிறப்பாக இருந்தது. அதுபோன்ற ஆடுகளத்தை விரும்புகிறேன். டி20 என்றாலே யார்க்கர், ஸ்லோ பால் ஆகியவற்றிற்காக தயாராக வேண்டும், அனால், இங்கே நல்ல பந்து போதுமானது. கடைசி நேரத்தில் பந்து சற்று ஸ்விங் ஆனது’’ என்றார்.