X

ஆஸ்திரேலியா, இந்தியா பெண்கள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிராவானது

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் கராரா ஓவலில் நடைபெற்றது . டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷபாலி வர்மா 31 ரன், ஸ்மிருதி மந்தனா 127 ரன், பூனம் ரவுத் 16 ரன், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன், யஸ்திகா பாட்டியா 19 ரன், தீப்தி சர்மா 66 ரன் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் பெர்ரி, கேம்ப்பெல், மோலினக்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆடிய ஆஸ்திரேலியா பெண்கள் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பெரி 68 ரன், கார்ட்னர் 51 ரன், அலீசா ஹீலி 29 ரன், கேப்டன் மெக் லானிங் 38 ரன், மெக்ராத் 28 ரன் எடுத்தனர்.

இந்தியா சார்பில் பூஜா 3 விக்கெட், கோ ஸ்வாமி, மேக்னா சிங், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 136 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். ஸ்மிருதி மந்தனா 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. பூனம் ராவத் 41 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

இதனால் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.