Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான 2வது ஒரு நாள் தொடர் நாளை தொடக்கம்

ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 ஒருநாள் போட்டித் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (5-ந்தேதி) நடக்கிறது.

முதல் போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமபலமாக இருந்தது. பேட்டிங்கில் கேப்டன் வீராட்கோலி, டோனி, கேதர் ஜாதவ், ரோகித்சர்மா ஆகியோரும், பந்து வீச்சில் முகமதுஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

வெற்றி பெற்ற அணி என்பதால் நாளைய போட்டிக்கான அணியில் கோலி மாற்றம் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து 1-1 என்ற கணக்கில் சமன் செய்யும் ஆர்வத்துடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

அதிரடி வீரர் மேக்ஸ்வெல் அந்த அணியின் துருப்பு சீட்டாக உள்ளார். இதுதவிர உஸ்மான் கவாஜா, ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ் ஹோம், நாதன் கோல்ட்டர், கும்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்களும் ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர். இரு அணிகளும் நாளை மோதுவது 133-வது ஆட்ட மாகும். இதுவரை நடந்த 132 போட்டியில் இந்தியா 48-ல், ஆஸ்திரேலியா 74-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணிகள் விவரம் வருமாறு:-

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், அம்பதி ராயுடு, டோனி, கேதர்ஜாதவ், விஜய்சங்கர், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமதுஷமி, ரிசப்பன்ட், லோகேஷ் ராகுல், பும்ரா, யசுவேந்திர சாஹல், சித்தார்த் கவூல்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ் கோம், மேக்ஸ் வெல், கேரி, நாதன் கோல்ட்டர், கும்மின்ஸ், பெகரன்டார்ப், ஆடம் ஜம்பா, நாதன் லயன், ஷான் மார்ஷ், கானே ரிச்சர்ட்சன், ஆர்சிஷார்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *