ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 313 ரன்களுக்கு ஆல் அவுட்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியதுடன் தொடரில் 2-0 முன்னிலை விக்கிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 360 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 79 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக், சாய்ம் ஆயுப் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.
ஷான் மசூத் 35 ரன்னிலும், பாபர் அசாம் 26 ரன்னிலும் ஆட்டமிழக்க 96 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. சிறப்பாக ஆடிவந்த முகமது ரிஸ்வான் 88 ரன்னில் அவுட் ஆனார். ஆகா சல்மான் 53 ரன்னிலும் அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் 227 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ஆமிர் ஜமால் உடன் மிர் ஹம்சா ஜோடி சேர்ந்தார். மளமளவென விக்கெட்டை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கடைசி விக்கெட்டை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தானை 250 ரன்னுக்குள் சுருட்டி விடலாம் என நினைத்தனர்.
ஆனால், ஹம்சா ஒரு பக்கம் நிலைத்து நிற்க மறுபக்கம் ஜமால் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தார். கம்மின்ஸ், ஸ்டார்க் வேகத்தையும், லயனின் சுழற்பந்தையும் இந்த ஜோடி திறமையாக எதிர்கொண்டது. இதனால் பாகிஸ்தானின் ஸ்கோர் 250, 275, 300 என உயர்ந்து கொண்டே சென்றது. அதேவேளையில் ஜமால் அரைசதத்தை கடந்தார். என்னடா… கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லையே… என ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் விரக்தியடைந்தனர்.
ஜமால் சதம் அடிப்பார்… பாகிஸ்தான் 325 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் நாதன் லயன் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். ஜமால் 82 ரன்னில் அவரது பந்தில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 77.1 ஓவரில் 313 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது.
ஜமால்- ஹம்சா ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 86 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பேட் கம்மின்ஸ் ஐந்து விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.